முகப்பு
வேலூர்

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள்வனத்துறை நடவடிக்கை எடுக்குமா

ஆம்பூர் வனப்பகுதி எல்லையோர விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளுக்காக நாட்டு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ஆம்பூர் வனப்பகுதி எல்லையோர விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளுக்காக நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பூர் வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வன விலங்குகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக விளை நிலங்களில் வளர்ந்துள்ள பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் காட்டை விட்டு வெளியேறி கிராமங்களை நோக்கி வன விலங்குகள் வருகின்றன.  இதில், காட்டுப் பன்றிகள், அதிகளவில் பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன. அவ்வாறு பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 
இந்நிலையில், பயிர்களைப் பாதுகாக்கக் காட்டுப் பன்றிக்கு சிலர் வெடி வைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. கந்தகம், கரித்தூள், வெள்ளைக்கல் தூள் உள்ளிட்ட சில வெடிபொருள்களை கலந்து உருண்டையாகப் பிடித்து அதன் மீது இறைச்சி கொழுப்புகளை தடவி, அதன் மேல் கயிறை இறுக்கமாக சுற்றி வெயிலில் காயவைத்துவிடுவார்கள். வெயிலில் காய வைக்கப்பட்ட அவை வெடிக்க தயாராக இருக்கும். இறைச்சி கொழுப்பு தடவி இருப்பதால் அதன் வாசனை காட்டுப் பன்றிகளை கவர்ந்திழுக்கும். அப்போது நிலத்தில் புதைத்து வைத்திருக்கும் நாட்டு வெடிகுண்டுகளைக் கடிக்கும் போது காட்டுப் பன்றிகள் தலை சிதறி இறக்கும். அவ்வாறு இறக்கும் காட்டுப்பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி மறைவிடங்களில் புதைத்து விடுவார்கள்.
வேட்டைக்கு பயன்படும் நாட்டு வெடிகுண்டுகள்: இதேபோல காட்டுப் பன்றியை வேட்டையாடவும் இத்தகைய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.  மேலும், வனப்பகுதியில் வீசப்படும் வெடிகுண்டுகளைக் கடிக்கும் காட்டுப் பன்றிகள் இறந்தவுடன் அதை வேட்டைக்காரர்கள் எடுத்துச் சென்று இறைச்சியை விற்பனைக்கோ அல்லது தங்களது உணவுக்கோ பயன்படுத்துவார்கள்.  
விவசாய விளை நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசப்படுத்துவதாக இருந்தாலும், அதை வெடிவைத்து கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைந்த மின் அழுத்த சூரியசக்தி மின்வேலிகளை அமைத்து கூட பயிர்களைப் பாதுகாக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 
மாவட்டத்தின் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் காட்டுப் பன்றிகளுக்காக வெடிகுண்டு வைப்பது மறைமுகமாக நடந்து வருகிறது.  இதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. அதே போல நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதையும் போலீஸார் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இரு வழிகளில் சட்டத்துக்கு புறம்பானச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஆம்பூர் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 19) நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால் இரு நாய்கள் தலை சிதறி இறந்தன.  அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சுமார் 8 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருந்தன. மேலும் சாலையோரமும் சில நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தன. இது காட்டுப் பன்றிகளுக்கு வைப்பதற்காக தயாரிக்கப்பட்டு எடுத்துச் செல்லும் போது கீழே விழுந்திருக்கலாம் அல்லது போலீஸாருக்கு பயந்து எவரேனும் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதும்,  வன விலங்குகளை கொல்லவும், வேட்டையாடவும் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதும் மிகப்பெரிய குற்றமாகும். அதனால் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →