வருமான வரித் துறை அதிகாரி போல் நடித்து ரூ. 1 லட்சம் வழிப்பறி
காட்பாடி அருகே வருமான வரித் துறை அதிகாரி போல் நடித்து பீடி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காட்பாடி அருகே வருமான வரித் துறை அதிகாரி போல் நடித்து பீடி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (72). இவர் பீடித் தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவர், அதே பகுதியைச் சேர்ந்த மலருக்கு கடனாக ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார். அப்பணத்தை மலர் காட்பாடி சார்-பதிவாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை திருப்பித் தந்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டு வீட்டுக்கு சென்ற போது கரசமங்களம் அருகே பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வழிமறித்துள்ளார். மேலும், தான் வருமான வரித் துறை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, சேட்டுவிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளார். பின்னர், அருகே உயரதிகாரி இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த நபர் பணப்பையுடன் சென்றுவிட்டாராம்.
இதையடுத்து சேட்டு அந்த நபர் கூறிய இடத்துக்குச் சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியாததை அடுத்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் சேட்டு புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.