வேலூர்

திருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு

DIN

காட்பாடி அருகே திருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. 
 வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே காளாம்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு, மோட்டூர் உள்பட 7 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டுகளாக நவராத்திரி விழா நடத்தி வந்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அந்த கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் காளாம்பட்டில் புதிய கோயில் கட்டப்பட்டது. பிறகு, நவராத்திரி விழாவை எந்த கோயிலில் நடத்துவது என்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு கோயில்களும் மூடப்பட்டதுடன், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
 இதன்தொடர்ச்சியாக, அவ்வப்போது கோயிலை திறந்து பூஜைகள் செய்ய சிலர் முயற்சி செய்வதும், அதற்கு மற்றொரு தரப்பினரும் தடுப்பதுமான நிலை தொடர்ந்து வந்தது. இதைத் தொடர்ந்து, வேலூர் சார் ஆட்சியர் கே.மெகராஜ் உத்தரவின்பேரில், வருவாய்த் துறை அலுவலர்கள் கடந்த 9-ஆம் தேதி காளம்பட்டில் உள்ள புதிய கோயிலை திறக்க வந்தனர். அதற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கோயிலை திறக்கக்கூடாது எனக் கூறி முற்றுகையிட்டனர். இதனால், இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விழாக் காலம் என்பதால் புதிய கோயிலை திறந்து வரும் 19-ஆம் தேதி வரை 10 நாள்களுக்குத் திறந்து  அரசே முன்னின்று திருவிழா நடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் துணை வட்டாட்சியர் கணேசன் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் இருதரப்பு கிராம மக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோயிலை திறந்தனர். தொடர்ந்து கோயிலில் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. 
திருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில் 9 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு திறக்கப் பட்டதை அடுத்து, அந்தக் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளையும், புடவை, பூஜை பொருள்களையும் கோயிலுக்குள் வீசினர். இவற்றை வேலூர் சார் ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT