வேலூர்

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் வறுமைக்கோடு பட்டியலில் குளறுபடி: குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார்

DIN

தமிழக அரசு அளிக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான வறுமைக்கோடு பட்டியலில் குளறுபடி நிலவுவதால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி தகுதியுடையவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வேலூர் ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காட்பாடியை அடுத்த வஞ்சூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தமிழக அரசு உத்தரவுப்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக,  பட்டியலை  சரிபார்க்கும் பணியை அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், வஞ்சூர் பகுதியில் 1600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நிலையில், பட்டியலில் 300 குடும்பங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில், பெரும்பாலானவர்கள் வசதி படைத்தவர்கள். இந்தப் பட்டியலில் குளறுபடி உள்ளது. எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையான பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு ஊராட்சி கிருஷ்ணாகவுண்டனூரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
கிருஷ்ணா கவுண்டனூர் கிராமத்தில் உள்ள 2.30 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 25 குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து வருகிறோம். இதில், 40 சென்ட் நிலத்தில் செல்லியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர், வீட்டுமனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தலா ரூ.25 ஆயிரம் வசூலித்தனர். ஆனால், இதுவரை பட்டா வாங்கித் தரவில்லை. அந்தப் பணத்தை மீட்டுத் தருவதுடன், அங்கு குடியிருக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்தனர். 
வேலூர், திருப்பத்தூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பது:
வேலூர், திருப்பத்தூர் பகுதிக்கு உட்பட்ட பொறியாளர்கள் கட்டட வரைபடம் தயாரித்தல், புளூ பிரிண்ட் தயாரித்து வழங்குதல், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெறுதல் ஆகியவற்றுக்கு வேலூர் நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் மனுக்களை சமர்ப்பித்து வந்தோம். ஆனால், கடந்த 6 மாதங்களாக பொறியாளர்களுக்கு அலுவலகத்துக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 30 நிமிஷங்கள் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். இதனால், கடந்த 6 மாதங்களாக அங்கீகாரம் கோரிய மனுக்கள் நிலுவையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைவில் பரிசீலனை செய்யவும், அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கவும் வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT