4,000 கி.மீ. சைக்கிள் பயணம்: ஆம்பூரில் முதியவருக்கு உற்சாக வரவேற்பு
முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வலியுறுத்தி 4,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள்
முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வலியுறுத்தி 4,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள தில்லியைச் சேர்ந்த முதியவர் புதன்கிழமை ஆம்பூர் வந்தார்.
தெற்கு தில்லியைச் சேர்ந்தவர் ஹரிபாஸ்கரன் (70). அவர் பிரபல தனியார் கணினி நிறுவனத்தில் உதவி செயல் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வலியுறுத்தி ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் மூலம் சென்னையில் இருந்து தில்லி வரையிலான 4,000 கி.மீ. தூரத்தைக் கடக்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த 21ஆம் தேதி சென்னையில் இருந்து தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார் . காஞ்சிபுரம், வேலூர் வழியாக செவ்வாய்க்கிழமை மாலை ஆம்பூர் வந்த ஹரிபாஸ்கரனுக்கு பல்வேறு தரப்பினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஓய்வு பெற்ற பின் பலர் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதை பல்வேறு காரணங்களால் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கவும் தற்போதைய தலைமுறையினர் முதியவர்களுக்கு உரிய மரியாதை வழங்கிக் காக்க வலியுறுத்தியும் சைக்கிள் பயணம் மூலம் பிரசாரம் செய்து வருகிறேன்.
வரும் 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் 15 கோடி முதியவர்கள் இருக்கக் கூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முதியோர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும். சென்னையிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் வழியாக தில்லி வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு, இரண்டு மாத காலத்துக்குப் பின் தில்லியை அடையத் திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் சுமார் 40 முதல் 70 கி.மீ. தூரத்தைக் கடக்க இலக்கை நிர்ணயித்து பயணம் செய்து வருகிறேன் என்றார் ஹரிபாஸ்கரன்.
அவருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரும் பயணம் செய்து வருகின்றனர்.