வேலூர்

தனியார் நிலத்தில் கழிவு மண் அகற்றுவதாகக் கூறி முறைகேடாக மணல் கடத்தல்

ஆம்பூரில் தனியார் நிலத்தில் கழிவு மண் அகற்றுவதாகக் கூறி சிலர் மணல் கடத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக ஆம்பூர் பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

எம். அருண்குமார்

ஆம்பூரில் தனியார் நிலத்தில் கழிவு மண் அகற்றுவதாகக் கூறி சிலர் மணல் கடத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக ஆம்பூர் பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் மேல்கிருஷ்ணாபுரம் - சாணாங்குப்பம் பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலர் மணல் அள்ளுவதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் கடத்தப்படுவது தெரிய வந்தது.
அதையடுத்து பொதுமக்கள் அந்த பொக்லைன் இயந்திரங்களையும், 4 லாரிகளையும் சிறைபிடித்தனர். ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அவற்றைப் பறிமுதல் செய்தனர். கழிவு மண் எடுக்க வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் அனுமதி ஆணை வழங்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து பொக்லைன் மற்றும் லாரிகள் விடுவிக்கப்பட்டன.
பாலாற்றங்கரையில் உள்ள மணல் முழுவதுமாக அள்ளப்பட்டு மண் தரையாக காணப்படுகிறது. இதனால் மணல் கிடைக்காததால் பாலாற்றங்கரையோர பகுதிகளில் உள்ள நிலங்களில் மணல் படுகைகள் காணப்படுவதால் அந்த நிலங்களில் கழிவுமண்ணை அகற்றி வேறு இடத்தில் கொட்டுவதாகக் கூறி வருவாய்த் துறை, கனிம வளத்துறை, பொதுப் பணித்துறை ஆகியவற்றின் உதவியுடன் கழிவு மண் அகற்றுவதற்கு தனியார் நில உரிமையாளர்கள் மூலம் அனுமதி பெறப்படுகிறது.
அந்த அனுமதி மூலம் அந்த நிலத்திலிருந்து முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. 
ஆம்பூர், வாணியம்பாடி, பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு தனியார் நிலங்களில் கழிவு மண் என்ற பெயரில் மணல் அள்ளிக் கடத்தப்படுகிறது. ஆம்பூர் நகர பகுதியில் பாலாற்றங்கரையோரம் தனியார் நிலத்தில் மண் என்ற பெயரில் மணல் கடத்தவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு மணல் அள்ளுவதால் அருகில் உள்ள மற்ற நிலங்களில் நில அரிப்பு ஏற்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றனர். பாலாற்றுப் படுகையே காணாமல் போகும் சூழ்நிலை உருவாவதோடு நிலத்தின் சமநிலையும் மாறுபடும்.
மணல் அள்ளப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லா விட்டால், வேலூர் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் இப்பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர். 
தொடர்ந்து பாலாற்றுப் படுகையில் உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு இதே போல் கழிவு மண் அகற்றுவதற்கான அனுமதியைப் பெற்று அதன் மூலம் மணல் அள்ளி கடத்துவதற்கான முயற்சிகளை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ராட்சத குழாய், பாலாற்றின் வழியாகவே வேலூருக்குச் செல்கிறது. அந்தக் குழாய்க்கு அருகிலேயே கூட மணல் அள்ளப்படுகிறது. அதனால் குழாய் சேதமடைய அதிக வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   
இதுகுறித்து வேலூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, "மணல் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. கழிவு மண் அகற்றுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பது தெரிய வந்தால் அதுகுறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா கூறுகையில், "இதுகுறித்து இப்போதுதான் எனக்குத் தகவல் வந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலரை அனுப்பி என்ன நிலைமை என்பதை அறிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாலாறு பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவர் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் கூறியது: மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் உள்ள மணலை முழுவதுமாக கொள்ளையடித்துவிட்டனர். தற்போது பட்டா நிலத்தில் உள்ள மணலை அள்ளிக் கடத்தத் தொடங்கியுள்ளனர். ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றங்கரையோர பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளுவதற்கு பாலாறு பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் கனிம வளத்துறை உதவி இயக்குநரை அணுகி, பட்டா நிலத்தில் உள்ள கழிவு மண்ணை அகற்றி கொண்டு சென்று வேறு இடத்தில் கொட்டுவதாகக் கூறி, அனுமதி பெறுகின்றனர். அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, மணலை அள்ளிக் கடத்துகின்றனர். 
தனியார் இடத்தில் மண் அல்லது மணலை அள்ளி விற்பனை செய்ய தனிநபர்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால் இவ்வாறு கழிவு மண் அகற்றுவதாகக் கூறி மணல் கடத்துகின்றனர். இதனால் பாலாற்றுப் படுகையில் மண் அரிப்பு ஏற்படும். இவ்வாறு மணல் அள்ளப்படும் நிலத்திற்கு அருகில் உள்ள மற்ற பட்டாதாரர்களின் நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அவர்களுடைய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போயுள்ளதால் மேலும் பாதிப்பு ஏற்படும்.
இந்த முறைகேட்டுக்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் துணைபோகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த முறைகேட்டைத் தடுக்க மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் சார்-ஆட்சியர், கனிம வளத்துறை உதவி இயக்குநர், ஆம்பூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT