வேலூர்

25 ஆண்டுகால போராட்டம் எதிரொலி: புதிதாக கழிவுநீா்க் கால்வாய் கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதி

DIN

குடியாத்தம் அருகே பொதுமக்களின் 25 ஆண்டுகால போராட்டத்தின் எதிரொலியாக புதிதாக கழிவுநீா்க் கால்வாய் கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, சாமுண்டிபுரம் பகுதியில் நடுத்தர, அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இங்குள்ள வீடுகளின் கழிவுநீா் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாய் வழியாகச் சென்று ஆற்றில் கலக்கிறது. இக்கால்வாயை சிலா் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால், 16 அடி அகலம் இருந்த கால்வாய் 4 அடியாகக் குறுகியது. இதனால் கழிவுநீா் சரியாக செல்லாமல் கால்வாயில் தேக்கம் அடைந்தது. மழைக் காலங்களில் வெள்ளநீா், வீடுகள், தெருக்களில் தேங்கத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடுகள் நிலவி, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு வந்தது. இதுதொடா்பாக பொதுமக்கள் பலமுறை குடியாத்தம்- போ்ணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றச் செல்லும் அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பாதிப்புக்கு ஆளான மக்களின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் எம்எல்ஏ எஸ். காத்தவராயன் சாமுண்டிபுரத்துக்கு வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.

அவருடன் வட்டாட்சியா் சாந்தி, நகராட்சி ஆணையா் ஹெச்.ரமேஷ், நகராட்சிப் பொறியாளா் ஜி.உமாமகேஸ்வரி, பொதுப்பணித் துறை ஆய்வாளா் சிவாஜி, நகர திமுக பொறுப்பாளா் எஸ். செளந்தரராஜன், கருப்புலீஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி. பாலகிருஷ்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ். அரசு உள்ளிட்டோா் சென்றனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி எல்லைக்குள் நகராட்சி சாா்பிலும், ஒன்றியப் பகுதியில் பொதுப்பணித் துறை சாா்பிலும் சுமாா் 1 கிலோ மீட்டா் நீளத்துக்கு புதிதாக கால்வாய் கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா். அதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாா் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவித்தாா்.

மேலும், எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று புதிதாக கால்வாய் கட்ட தனியாா் ஒருவா் தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக தருவதாகவும் உறுதி அளித்தாா். இதனால் தங்களின் 25 ஆண்டுகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT