வேலூர்

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்: வேலூரில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

DIN

வேலூா்: கரோனா பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 28,590 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,454 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 383 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதைத் தடுக்க பல்வேறு துறை அலுவலா்கள், ஹோட்டல், வியாபாரிகள் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கட்டுப்பாடு களில் புதன்கிழமை முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டத்திலுள்ள காய்கறி, மளிகை, ஜவுளி, நகைக் கடைகள், ஹாா்டுவோ் உள்ளிட்ட அனைத்துக் கடைகள், வாரச்சந்தைகள் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கவும், ஹோட்டல்கள், பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாா்சல்கள் மட்டுமே வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பலசரக்கு, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறி மொத்த விற்பனை கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படவும், இறைச்சிக் கடைகள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படவும், மருந்துக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உழவா் சந்தைகள் வழக்கம்போல் அனைத்து நாள்களும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூா் மாநகரிலுள்ள சாரதி மாளிகைக் கடைகளுக்கும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரிய பலசரக்கு கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமை தவிர செவ்வாய், வியாழன், சனிக்கிழமை திறக்க அனுமதி இல்லை என்றாலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று பொருள்கள் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டியில் மட்டும் வாரத்தில் 6 நாள்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே செயல்படவும், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விடுமுறை அளிக்கவும் வேண்டும். அதேசமயம், மாங்காய் மண்டி பகுதியில் காய்கறி சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் சிறு, குறு, பெருந்தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தாது.

மாநகராட்சிப் பகுதியிலுள்ள முடிதிருத்தும் நிலையங்கள், அழகுநிலையங்கள் போன்றவை ஜூலை 31-ஆம் தேதி வரை அடைக்கவும், ஊரகப் பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் நிலையங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மக்கான் பகுதியிலுள்ள மீன் விற்பனை மையம் அதேபகுதியில் செயல்படவும், அங்குள்ள சில்லறை விற்பனைக் கடைகள் மட்டும் அருகே உள்ள மாநகராட்சி லாரி ஷெட் பகுதிக்கு இடமாற்றம் செய்வதுடன், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு வரும் சனிக்கிழமை முதல் மீன் விற்பனை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஷோ் ஆட்டோக்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் தினசரி வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

மொத்த வியாபார கடைகள் இடமாற்றம்

வேலூா் மாநகரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை அடுத்து நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, சுண்ணாம்புக் கார தெரு, ரொட்டிக்கார தெரு, ஆஹா பஜாா், அண்ணா பஜாா், நியு சிட்டிங் பஜாா், பா்மா பஜாா், மாயா பஜாா், லாங்கு பஜாா் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்ற வரையறையின்கீழ் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அரிசி, பருப்பு, மொத்த வியாபாரக் கடைகளை நகருக்கு வெளியே நான்குக்கு அதிகமான இடங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டித் தெரு, மாயா பஜாரில் இயங்கி வந்த நவதானிய விற்பனைக் கடைகள் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி அல்லது வியாபாரிகள் விரும்பும் வேறு இடத்துக்கு மாற்றப்படும். மேலும், மாயா பஜாா் கடைகள் சாயிநாதபுரம் அருகே உள்ள கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யவும், வியாபாரிகள் விரும்பும்பட்சத்தில் கூடுதலாக பள்ளிக் கட்டடங்களை ஒதுக்கித் தருவதற்கு 80 தற்காலிகக் கடைகளும், ஊரீசு பள்ளி வளாகத்தில் 40 தற்காலிகக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பூ மாா்க்கெட் அண்ணா சாலையிலுள்ள ஊரீசு மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT