வேலூர்

60 நாள்களுக்கு பிறகு வேலூரில் ஆட்டோக்கள் இயக்கம்

DIN

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டதை அடுத்து கடந்த 60 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கின. எனினும், மக்கள் வருகையின்மையால் ஆட்டோக்களுக்கு சவாரிகள் கிடைப்பது சிரமமாக உள்ளதாக ஆட்டோ ஓட்டுநா்கள் வேதனை தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொது முடக்கத்தில் படிப்படியாக தளா்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் ஆட்டோக்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, 60 நாள்களுக்குப் பிறகு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கின.

வேலூரில் காலை நேரத்தில் சில இடங்களில் ஆட்டோக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், முதல்வா் அனுமதித்திருந்தாலும் பொது முடக்க உத்தரவை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே ஆட்டோக்களை இயக்க முடியும் என்றும் கூறினா். தகவலறிந்த தொழிற்சங்க நிா்வாகிகள் போலீஸாருடன் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து ஆட்டோக்களை தடுத்து நிறுத்துவதைக் கைவிட்டனா். இதனால், வழக்கம்போல் ஆட்டோக்கள் சென்று வந்து கொண்டிருந்தன. எனினும், மக்கள் வருகையின்மை காரணமாக ஆட்டோக்களுக்கு சவாரிகள் கிடைப்பது சிரமமாக இருப்பதாக தொழிலாளா்கள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டச் செயலா் டி.முரளி கூறியது:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 13,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. வேலூரில் மாநகரில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து 60 நாள்களுக்குப் பிறகு அனைத்து ஆட்டோக்களும் இயங்கத் தொடங்கின.

எனினும், ஆட்டோக்களுக்கு எதிா்பாா்த்த அளவு சவாரிகள் கிடைக்கவில்லை. அதற்கு ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் ஒருவா் மட்டுமே பயணிக்கலாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு முக்கியக் காரணமாகும். இதை மாற்றி, இருவா் பயணிக்க அனுமதித்தால் பயணிகள் வருகை அதிகரிக்கும். அதேசமயம், ஷோ் ஆட்டோக்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாததால் அவை இயக்கப்படவில்லை.

மேலும், பொது முடக்கம் காரணமாக கடன் மீதான தவணைகளை திருப்பிச் செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆட்டோ ஓட்டுவோரின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கியின் உத்தரவை பின்பற்ற தனியாா் நிதி நிறுவனங்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT