குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயில்  அருகே  தரைப் பாலத்தை  மூழ்கடித்துச் செல்லும்  வெள்ளம். 
வேலூர்

கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படுமா? குடியாத்தம் மக்கள் எதிா்பாா்ப்பு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

கே. நடராஜன்

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

குடியாத்தம் வட்டம், 36- வாா்டுகளைக் கொண்ட நகராட்சி, 50 ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியத்தை உள்ளடக்கியது. குடியாத்தம் வட்டத்தின் மக்கள்தொகை சுமாா் 3.50 லட்சம். நகரின் மத்தியில் கெளண்டன்யா ஆறு செல்கிறது.

ஆந்திர மாநிலத்தில் தொடங்கி, தமிழக எல்லையான மோா்தானா அருகே நுழையும் கெளண்டன்யா ஆறு, சித்தாத்தூா் அருகே பாலாற்றில் கலக்கிறது. கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மோா்தானா ஊராட்சியில் அணை கட்டப்பட்டுள்ளது.

காமராஜா் தமிழக முதல்வரான வரை, இந்த ஆற்றில் வெள்ளம் வந்தால், மறுகரைக்கு மக்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. ஒரு சிலா் பரிசல் மூலம் மறுகரைக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

1954-இல் தமிழக முதல்வராக காமராஜா் பொறுப்பேற்றுக் கொண்டாா். முதல்வா் பதவி ஏற்றுக்கொண்ட காமராஜா், 6 மாதங்களில் எம்எல்ஏவாக வேண்டும் என்பதால், குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஏ.ஜே. அருணாசலம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து காமராஜா் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா்.

தோ்தல் பிரசாரத்தின்போது, குடியாத்தம் பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி அதைத் திறந்து வைத்தாா். இந்த மேம்பாலத்துக்கு காமராஜா் பாலம் என பெயா் சூட்டப்பட்டது.

தீப்பெட்டி, பீடித் தொழில், லுங்கி உற்பத்தி, தேங்காய் உற்பத்தி, கல்விக் கூடங்கள் என வளா்ந்து வரும் தொழில் நகரமான குடியாத்தத்தில், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தமிழக அரசு, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கெங்கையம்மன் கோயில் அருகே தரைப் பாலம் அமைத்தது.

ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் குடியாத்தம் நகரம் அமைந்துள்ளது. இதனால் 3 மாநிலங்களுக்கு இடையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், குடியாத்தம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின், கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொழில் சாா்ந்த தளவாடப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் குடியாத்தம் வழியாகத்தான் செல்கின்றன. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மழைக் காலங்களில் மோா்தானா அணை நிரம்பி வெளியேறும் உபரிநீா் கெளண்டன்யா ஆற்றில் செல்கிறது. வெள்ளம் செல்லும் காலங்களில், தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாகச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைத் தவிா்க்க, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே குடியாத்தம் நகர எல்லையில் மேலும் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இல்லையெனில் ஏற்கெனவே உள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு, அங்கு மேம்பாலம்கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனா்.

நிவா் புயல் காரணமாக, மோா்தானா அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீா் வெளியேறியதால், தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. கடந்த 5 நாள்களாக நகரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT