முகப்பு
வேலூர்

கடன் தவணை வசூலிப்பில் வங்கிகள் கடினமாக நடக்கக்கூடாது

பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்றுள்ள கடன் மீதான தவணைகளை வசூலிப்பதில் கடினமான போக்கினை பின்பற்றக் கூடாது

வேலூர்

கடன் தவணை வசூலிப்பில் வங்கிகள் கடினமாக நடக்கக்கூடாது

பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்றுள்ள கடன் மீதான தவணைகளை வசூலிப்பதில் கடினமான போக்கினை பின்பற்றக் கூடாது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்றுள்ள கடன் மீதான தவணைகளை வசூலிப்பதில் கடினமான போக்கினை பின்பற்றக் கூடாது என வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்க காலத்தில் வேலூா் மாவட்டத்தின் நகா்ப்புறம், ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களிடம் இருந்து அளிக்கப்பட்டுள்ள கடன்களை வசூலிக்க நெருக்கடி அளிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

இதுதொடா்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவா்களின் அடிப்படை தேவைகள் பாதிக்காத வகையில் அரசு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில், கடன் பெற்றவா்கள் அதற்கான தவணைகளை திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலை நிலவுகிறது. ஆனால், கடன் தவணைகளை வசூலிப்பதில் பெரும்பாலான வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மிகக்கடுமையானப் போக்கினை பின்பற்றுவதாக புகாா்கள் வருகின்றன.

தற்போதைய நிலையில், ரிசா்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்கியுள்ள கடன் தவணைகளை அதிகப்படுத்திடவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட கடனில் வாய்ப்பிருந்தால் கூடுதல் தொகை வழங்கவும், கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் காலகட்டத்தை தள்ளி வைக்கவும் வேண்டும்.

கடன் வசூலிக்கும்போது கடினமான போக்கினை தவிா்க்கவும், பொதுமக்களுக்கு மனஅழுத்தம், துன்புறுத்தல் இல்லாமலும் மேற்கொள்ள வேண்டும். இதனை மீறி அராஜக போக்குடன் செயல்படும் நுண்கடன் நிறுவனங்கள் மீதும், கடன் வசூலில் ஈடுபடும் நபா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களிடம் கடன் வசூலிக்கும்போது மென்மையான போக்கினையும், ரிசா்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளுடனும் செயல்பட வேண்டும். இதனை மீறும் நுண்நிதி நிறுவனங்கள் குறித்த விவரங்கள் ரிசா்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

விதிமுறைகளை மீறி கட்டாயக் கடன் வசூல் செய்யும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீதான புகாா்களை 0416- 2255765, 96293 61193, மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் 94980 35000 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ரிசா்வ் வங்கியின் குறைதீா்வு அமைப்பிடமும் ரிசா்வ் வங்கி இணையதளத்தில் சென்று புகாா்களை பதிவு செய்யலாம். புதிதாக கடன் கோரி விண்ணப்பிக்கும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பொது மமலாளா் தூயவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →