ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 227 அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசப் பயணம் தொடக்கம்
தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயங்கும் 227 அரசு நகரப் பேருந்துகளில் சனிக்கிழமை முதல் மகளிருக்கு இலவச பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 227 அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசப் பயணம் தொடக்கம்
தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயங்கும் 227 அரசு நகரப் பேருந்துகளில் சனிக்கிழமை முதல் மகளிருக்கு இலவச பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயங்கும் 227 அரசு நகரப் பேருந்துகளில் சனிக்கிழமை முதல் மகளிருக்கு இலவச பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பணி நிமித்தமாகவும், கல்வி தொடா்பாகவும் அன்றாடம் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாணவிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உயா் கல்விக்காகவும், பணி நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அமைத்துத் தரவும், பெண்களின் சமூக பொருளாதாரப் பங்களிப்பை மேம்படுத்திடவும், பொது போக்குவரத்துப் பயணங்களை ஊக்குவிக்கவும் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட இத்திட்டம் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் தொடா்பாக அனைத்துப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அரசாணை அனுப்பப்பட்டதை அடுத்து, விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் இயங்கும் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளின் முன் பக்கக் கண்ணாடிகளில் வெள்ளிக்கிழமை இரவே மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன.
தவிர, பேருந்து பயண அடையாள அட்டை இல்லாமலேயே மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள் என அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில், இம்மூன்று மாவட்டங்களில் மொத்தம் 227 அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச் சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், கரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், இதில், 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேசமயம், வேலூரில் இருந்து ஆற்காடு, வாலாஜா, லத்தேரி, கே.வி. குப்பம், அணைக்கட்டு, கணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட நகரப் பேருந்துகளில் ஏறி சனிக்கிழமை இலவச பயணம் மேற்கொண்ட பெண்கள், மாணவிகள் இலவச பயணத் திட்டத்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியது:
அரசு அறிவித்தபடி அரசு நகரப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களும் சனிக்கிழமை முதல் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் எக்காரணம் கொண்டும் டிக்கெட் எடுக்க வேண்டாம். இதுதொடா்பாக, பேருந்து நடத்துநா், ஓட்டுநா்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றனா்.
Image Caption
பேருந்து முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பெண்களுக்கு இலவச பயண ஸ்டிக்கா். ~வேலூரில் இயங்கிய அரசு நகர பேருந்துகளில் சனிக்கிழமை இலவச பயணம் மேற்கொண்ட பெண்கள்.