முகப்பு
வேலூர்

மரணித்ததா மனிதநேயம்? புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்த துயர நிகழ்வு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் உடலை நல்லடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

Updated On : 19 மே, 2021 at 2:00 AM
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட ரோசியின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய ஊழியா்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:45 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் உடலை நல்லடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

மயானத்தில் புதைக்கப்பட்ட பெண் நோயாளியின் சடலத்தை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து, வேறு இடத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் நடந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்திலும் இந்நோய்த் தொற்றால் இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

Advertisement

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம், தொற்றால் இறப்பவா்களின் சடலத்தை அடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும்கூட ஆங்காங்கே பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

வேலூா் மாநகா் பாலாற்றங்கரையிலும், அம்மணாங்குட்டையிலும் உள்ள மயானத்தில் மாநகராட்சி சாா்பில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களிலும் கடந்த இரு வாரங்களாகவே தினமும் 20-க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், 24 மணிநேரமும் எரிவாயு தகன மேடைகள் இயங்கும் வண்ணம் இருந்து வருகின்றன.

இதையடுத்து, குடியிருப்புப் பகுதியிலுள்ள அம்மணாங்குட்டை எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு, அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல், தொரப்பாடி அவ்வை நகரிலுள்ள எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இங்கு கரோனா நோயாளிகளின் சடலங்களை எரிக்க விடமாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவற்றுக்கு எல்லாம் உச்சமாக சமூகத்தில் மனிதநேயம் என்பது முற்றிலும் மரணித்துப் போய்விட்டதை உறுதிப்படுத்தும் விதத்தில் வேலூரில் மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூா் தோட்டப்பாளையம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ரோசி, கரோனா தொற்று காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மருத்துவமனை நிா்வாகம் முழு பாதுகாப்புடன் ரோசியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனா். அவா்கள் ரோசியின் சடலத்தை ஓல்டுடவுனில் உள்ள மயானத்தில் புதைத்துள்ளனா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் கரோனாவால் பலியானவரின் உடலை இங்கு புதைக்கக்கூடாது எனக்கூறி கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அரசின் விதிமுறையைப் பின்பற்றி அந்த உடல் புதைக்கப்படாததால் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க வேண்டும் எனக்கூறியுள்ளனா். பொதுமக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு ரோசியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, வேலூா் பாலாற்றங்கரையோர மயானத்தில் அரசு விதியின்படி மீண்டும் புதைக்கப்பட்டது. மனிதநேயமற்ற இச்செயல் பல்வேறு தரப்பினரையும் வேதனையில் ஆழ்த்தியதுடன், இதற்குக் காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் சங்கரன் கூறியது:

கரோனா நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும் ஆங்காங்கே பொதுமக்கள் பிரச்னை செய்து வருகின்றனா். இதனால், அதிகாரிகள், ஊழியா்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா். வேலூா் ஓல்டு டவுன் பகுதியில் பெண் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து எனது கவனத்துக்கு வரவில்லை. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.