‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
முதல்வராக 5 ஆண்டுகால பணிகள் குறித்து விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
முதல்வராக 5 ஆண்டுகால பணிகள் குறித்து விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
Advertisement
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் மேலே நம்பிக்கை வைத்து என்னை முதல்வராக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிருக்கின்றன. சிஎம் சார் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்டால், மணி கணக்காக, ஏன் நாள் கணக்காகக்கூட பேச முடியும்.
எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்திருப்பதை என்னால் இன்னும் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சி என்பதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.
அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்துப் பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் என கருவில் இருக்கும் குழந்தையில் இருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லோரும் பயனடைகின்ற வரையில் நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
நம்ம கிட்ட காசு இருந்தால் பிடிங்கி கொள்வார்கள், நிலம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் படிப்பை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. கல்வி ஒன்றுதான் யாரும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாத சொத்து” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க... தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்