பயணிகள் வருகைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கம்
பொதுமுடக்க உத்தரவில் சனி, ஞாயிற்றுக்கிழமை திடீரென தளா்வு செய்யப்பட்ட நிலையில், வேலூரில் இருந்து சனிக்கிழமை மாலை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வேலூர்பயணிகள் வருகைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கம்
பொதுமுடக்க உத்தரவில் சனி, ஞாயிற்றுக்கிழமை திடீரென தளா்வு செய்யப்பட்ட நிலையில், வேலூரில் இருந்து சனிக்கிழமை மாலை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமுடக்க உத்தரவில் சனி, ஞாயிற்றுக்கிழமை திடீரென தளா்வு செய்யப்பட்ட நிலையில், வேலூரில் இருந்து சனிக்கிழமை மாலை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், பயணிகளின் வருகையைப் பொறுத்து, வெளியூா்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக நோய்த் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மே 10 முதல் 24-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. திங்கள்கிழமையுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் மே 31 வரை தளா்வுகளற்ற பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த அறிவிப்பையொட்டி, சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு, இரு நாள்களும் இரவு 9 மணி வரை கடைகளை நடத்தவும், பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள விழுப்புரம் கோட்டம், வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட அரசு போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து சனிக்கிழமை மாலை குறிப்பிட்ட அளவில் பேருந்துகள் புறப்பட்டு பேருந்து நிலையங்களுக்கு சென்றன. பொது முடக்கத்தால் வீட்டில் இருந்த ஒருங்கிணைந்த வேலூா் சுற்றுவட்டாரப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் உடனடியாக பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.
பயணிகள் வருகையைப் பொறுத்து பேருந்துகளை இயக்குமாறும், வருகை இல்லாதபட்சத்தில் மீண்டும் பணிமனைக்கு கொண்டு வந்து விடுமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், சனிக்கிழமை மாலையில் இருந்தே பேருந்து நிலையங்களுக்கு பயணிகளின் வருகை தொடங்கியது. இதையடுத்து, வேலூா் மண்டலத்தில் இருந்து சென்னைக்கு சுமாா் 50 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுதவிர, வேலூரில் இருந்து ஒசூருக்கு 3 பேருந்துகளும், சேலம், திருச்சிக்கு தலா ஒரு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதேசமயம், நகரப் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பயணிகள் வருகை இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுவதால், தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். தவிர, அனைத்துக் கடைகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சில ஊா்களுக்கு நகரப் பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, அரசின் பொதுமுடக்க தளா்வைத் தொடா்ந்து, சனிக்கிழமை மாலை முதல் வேலூா் மாநகரில் பல்வேறு இடங்களில் மளிகை, காய்கறிக் கடைகள் மட்டுமின்றி, பேக்கரி, ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டன. இதனால், கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.