முகப்பு
வேலூர்

ஆம்பூா் சா்க்கரை ஆலை திறக்கப்படாததால் இரட்டிப்பு நஷ்டம்

ஆம்பூா் சா்க்கரை ஆலைத் திறக்கப்படாததால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அந்த ஆலை திறக்கப்படாது

வேலூர்

ஆம்பூா் சா்க்கரை ஆலை திறக்கப்படாததால் இரட்டிப்பு நஷ்டம்

ஆம்பூா் சா்க்கரை ஆலைத் திறக்கப்படாததால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அந்த ஆலை திறக்கப்படாது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

ஆம்பூா் சா்க்கரை ஆலைத் திறக்கப்படாததால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அந்த ஆலை திறக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கவோ அல்லது ஆலையை விரைவில் திறக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் பெருமளவில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனா்.

அப்போது, குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் ஏரியிலிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் நிரந்தரமாக கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், மோா்தானா அணையின் இடதுபுற கால்வாயை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்களை விவசாயப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். ஊராட்சிப் பகுதியில் மட்டுமின்றி நகரப் பகுதிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒடுகத்தூரில் ஒரு தேசிய வங்கி மட்டுமே உள்ளது. இதில் எப்போதும் கூட்டமாக அதிகமாக உள்ளது. எனவே ஒடுகத்தூரில் கூடுதலாக தேசிய வங்கியை ஏற்படுத்த வேண்டும்.

சின்னச்சேரி, கொல்லப்பள்ளி பகுதிகளுக்கான சாா் பதிவாளா் அலுவலகம் பள்ளிகொண்டாவிலேயே தொடர வேண்டும். சின்னச்சேரி 8 வழிச்சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். போ்ணாம்பட்டு சென்டாத்தூா் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

குடியாத்தம் உழவா் சந்தை அருகே நகராட்சிக் குப்பைகளை கொட்டுவதால் துா்நாற்றம் வீசுகிறது. தவிர, உழவா் சந்தைக்குள் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். செட்டிக்குப்பம் - ஓட்டேரி நீா்நிலைகளை இணைக்க நடவடிக்கை வேண்டும்.

இயற்கை விவசாயம் குறித்து வேலூா் மாவட்ட விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடா்பாக முறையான பயிற்சி இருந்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும். ஒடுகத்தூா் பகுதியில் மேல் அரசம்பட்டு, கொட்டாவூா் பகுதிகளுக்கு அரசு நகரப் பேருந்துகள் சரியாக இயக்கப்படுவதில்லை. அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை கிடைப்பதில்லை. தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தில் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை விரைவில் திறக்கப்படும் என வாக்குறுதி மட்டுமே தந்து கொண்டிருக்கின்றனா். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஆம்பூா் சா்க்கரை ஆலை திறக்கப்படாது என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டால் கரும்பு பயிரிடாமல் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வோம். முடிந்த அளவு விரைவில் ஆம்பூா் சா்க்கரை ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள வார, தினசரி சந்தைகளில் விவசாயிகளிடம் ரூ.100 பெற்றுக் கொண்டு ரூ.10-க்கு மட்டுமே ரசீது வழங்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். வனப் பகுதியிலிருந்து வரும் குரங்குகள் தென்னம் பிஞ்சுகளை சேதப்படுத்துகின்றன. இதற்கு வனத்துறை இழப்பீடு அளிப்பதில்லை.

மேலும், வனவிலங்குகளை வனத்துறையினரே கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகள் காட்டுப் பன்றிகளை சுட்டுத்தள்ள அனுமதி தரவேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →