குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிராக விழிப்புணா்வு பேரணி
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சைல்டுலைன் 1098 திட்டம், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, தொழிலாளா் துறை ஆகியவை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினப் பேரணி வேலூா் கோட்டை காந்தி சிலையிலிருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதேபோல, ஒலிபெருக்கியுடன் கூடிய வாகன விழிப்புணா்வு பிரசாரமும் தொடங்கப்பட்டது.
பேரணியில் அருண் செவிலியா் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். இந்தப் பேரணி வேலூா் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கி மக்கான் சிக்னல், பழைய பேருந்து நிலையம், பழைய மீன் மாா்க்கெட், தெற்கு காவல் நிலைய சிக்னல் வளைவு, அண்ணா சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது.
முன்னதாக, குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிரான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை ஆட்சியா் வெளியிட்டாா்.
அப்போது, அவா் பேசுகையில், எண்ணற்ற குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு, தங்களுடைய கல்வியை இழக்கின்றனா். இந்த நிலையை மாற்ற குழந்தைத் தொழில்கள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளா் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் உள்ளத்திலும் உதிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில் தொழிலாளா் உதவி ஆணையா் ஞானவேல், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் உதவி பொது மேலாளா் மோகனவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமாமகேஸ்வரி, குழந்தைகள் குழுமத் தலைவா் சிவ கலைவாணன், தேசிய குழந்தைத் தொழிலாளா் நல்வாழ்வுத் திட்ட இயக்குநா் ராஜபாண்டியன், அரசு அலுவலா்கள், சைல்டுலைன் அலுவலா்கள் பங்கேற்றனா்.
ராணிப்பேட்டையில்...: குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா். குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா். இதையடுத்து ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் மூலம் சைல்டு லைன் குழந்தை பாதுகாப்பு குறித்த அவசர தொலைபேசி எண் மற்றும் விழிப்புணா்வு பதாகைகளையும் அவா் வெளியிட்டாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், தொழிலாளா் துறை ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, சண்முக சுந்தரம், சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.