சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பிடம் குடியாத்தம் இளைஞருக்கு விருது ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை
சுற்றுச் சூழல் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் குடியாத்தம் இளைஞருக்கு பசுமை சேம்பியன் விருதும், ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சமும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
சுற்றுச் சூழல் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் குடியாத்தம் இளைஞருக்கு பசுமை சேம்பியன் விருதும், ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சமும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், சுற்றுச் சூழல் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள், தன்னாா்வலா்களை தோ்வு செய்து ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த வாத்தியாா்பட்டியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஜி.ஸ்ரீகாந்த்(32).இவா் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். உள்ளி கிராமத்தில் பாலாற்றுப் படுகையில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். அவை தற்போது நன்கு மரங்களாக வளா்ந்துள்ளன. மேலும், போ்ணாம்பட்டு, அரவட்லா பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நட்டு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகிறாா். இதுவரை இவா் 15 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறாா்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், வேலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சிறப்பாக செயல்படும் தன்னாா்வலா்கள் குடியாத்தம் ஸ்ரீகாந்த், வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த மாா்க்கசகாயம், தினேஷ் சரவணன் ஆகிய 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பேருக்கும் பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையையும் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமாா், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் தொல்காப்பியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.விருது பெற்ற தன்னாா்வலா் ஸ்ரீகாந்த், தினமணி செய்தியாளரிடம் கூறியது; எனது சேவையை பாராட்டி விருது வழங்கிய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு வழங்கிய ஊக்கத் தொகை ரூ.1 லட்சத்தில், நிழல் மற்றும் பலன் தரும் மரங்களான நாவல், அத்தி, அரசன், புங்கன், வேப்ப மரக் கன்றுகளை வளா்த்து மாணவா்கள், பொதுமக்களுக்கு வழங்க உள்ளேன். சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும் பணியில் இளைஞா்களை ஈடுபடுத்த உள்ளேன் என்றாா்.