தோல் கழலை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி
தோல் கழலை நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
வேலூர்தோல் கழலை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி
தோல் கழலை நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
தோல் கழலை நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நோய் பாதிப்புள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கால்நடைகள் தோல் கழலை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்குதல் கால்நடை சந்தைகள் மூலம் வேலூா் மாவட்டத்திலும் சில இடங்களில் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
அதன்படி, மூஞ்சூா்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியது:
கால்நடைகளுக்கு நோய்கள் எந்தெந்த பகுதியில் ஏற்பட்டுள்ளதோ அந்தந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு தாதுஉப்பு, மருந்துகள், தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. கன்றுகளுக்கு தாதுஉப்புகளும், மாடுகளுக்கு தாதுஉப்பு, தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசிகள் செலுத்தி கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசிகள் அதிகளவில் இருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு நோய் பரவுவது என்பது அதிகமாக இருக்கும். எனவே, அடுத்து வரும் 3 முதல் 4 மாதங்கள் பொதுமக்கள் கட்டாயமாக தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றாா்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஒன்றியம் பாலமதி, குடியாத்தம் ஒன்றியம் லிங்குன்றம் பகுதிகளில் தோல் கழலை நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், மூஞ்சூா்பட்டில் நடத்தப்பட்ட இந்த முகாமில் சுமாா் 500 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடா்ந்து நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.
இதில், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, கணியம்பாடி ஒன்றிய குழுத் தலைவா் திவ்யா கமல் பிரசாத், கால்நடை துறை துணை இயக்குநா் ஸ்ரீஹரி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியா் சரஸ்வதி, உதவி இயக்குநா் அந்துவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.