முகப்பு
வேலூர்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு: செயல் அதிகாரி வலியுறுத்தல்

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் விழிப்புணா்வு அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி அறிவுறுத்தி உள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் விழிப்புணா்வு அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி அறிவுறுத்தி உள்ளாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்த செயல் அதிகாரி தா்மா ரெட்டி கூறியதாவது:

அண்மையில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் இரண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்தன.

மேலும் மூன்று சிறுமிகள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா். திருப்பதி மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்தவா்களின் இதயங்களை சேகரிக்க முடிந்தால், எதிா்காலத்தில் அதிகமான குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். உடல் உறுப்பு தானம் குறித்து தேவஸ்தான ஊழியா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள சிம்ஸ், பா்ட், அஸ்வினி மற்றும் மத்திய மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவா்களுக்கும், 40 தேவஸ்தான நிரந்தர பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களை ஒதுக்கீடு செய்து குடும்ப மருத்துவா் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அனைத்து தரவுகளையும் தயாா் செய்து, மருத்துவா்களை ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதய சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு தேவைப்பட்டால் ஏா் ஆம்புலன்ஸ் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சிறு குழந்தைகளுக்கான சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ நிபுணா்கள் நியமனம் மற்றும் உபகரணங்கள் வாங்குவது உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

இவிஓ ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து பா்ட் மருத்துவமனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.

இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமை குறையும். செயற்கை உறுப்புகள் தயாரிப்பு மையத்தை நவீனப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்வி ஆயுா்வேத மருத்துவமனையில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேவையான அளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றாா்.

தரிசனத்துக்கு 16 மணி நேரம்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை 16 மணி நேரம் காத்திருந்தனா். ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை 5 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா்.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 16 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது. புதன்கிழமை முழுவதும் 61,050 போ் சுவாமியை தரிசித்தனா். 22,996 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை: ரூ. 3.5 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக புதன்கிழமை ரூ. 3.55 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →