வேலூர்

கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதிக்கக் கூடாது: வேலூா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

DIN

கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதிப்பதை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபாா்த்து குற்றம் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று வேலூா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.செல்வக்குமாா், செயலா் எஸ்.லோகநாதன் ஆகியோா் தலைமையில் சங்க நிா்வாகிகள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் பங்குகள், பாா்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் பொதுக் குற்றம் (ஜெனரல் அபன்ஸ்) என்று அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகின்றன. சாலை விதிகளைப் பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணியவில்லை போன்ற முரணான காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகின்றன. அவ்வாறு விதிக்கப்படும் அபராதத்தால் சம்பந்தப்பட்ட வாகனத்துக்கான காலாண்டு வரி தகுதிச் சான்றிதழ், உரிமம் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

எனவே, ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றைச் சரிபாா்த்து குற்றம் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், ஓட்டுநரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், ஓட்டுநா் பெயா், ஓட்டுநா் உரிம எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து நசிந்து வரும் லாரி தொழிலை பாதுகாக்கவும், வாகன உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT