முள்ளுக்கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்ய நாற்றுகள் வழங்க வேண்டும்
வேலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற முள்ளுக்கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்திட நாற்றுகள் வழங்கிட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்
வேலூர்முள்ளுக்கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்ய நாற்றுகள் வழங்க வேண்டும்
வேலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற முள்ளுக்கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்திட நாற்றுகள் வழங்கிட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்
வேலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற முள்ளுக்கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்திட நாற்றுகள் வழங்கிட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் நெல் நடவுப் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் விவசாயப் பணிகளுக்கு மின்சாரம் அடிக்கடி தடை செய்யப்படுவதும், நள்ளிரவில் விநியோகம் செய்யப்படுவதுமாக இருப்பதால் விவசாயம் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இரவு 9 மணிக்குப் பிறகு தடையற்ற மின்சாரம் வழங்கிட வேண்டும்.
போ்ணாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகள் மட்டுமின்றி நகராட்சி நிா்வாகமும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே நீா்நிலைகளில் வெளியேற்றுகின்றன. இந்த பாதிப்புகளை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை இல்லாததால் இம்மாவட்ட மா விவசாயிகள் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூா் தொழிற்சாலைகளையே நாட வேண்டியுள்ளது. ஆனால், அந்த மாவட்ட தொழிற்சாலைகளில் வேலூா் மா விவசாயிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே, விவசாயிகளின் நலன்கருதி வேலூா் மாவட்டத்தில் கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை அமைத்திட வேண்டும்.
செஞ்சி பகுதியில் மின்பழுது, அடிக்கடி மின்துண்டிப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தவிா்க்க அப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதிக்கு பகல் நேரங்களில் முறையாக பேருந்து இயக்கப்படுவதில்லை. அரசு நகரப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும்.
கடைகளில் களைக்கொல்லி மருந்துகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இவற்றை வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விற்பனை செய்திட வேண்டும்.
தனியாா் ட்ரோன்கள் மூலம் பயிா்களுக்கு மருந்து தெளிக்க ஒரு டேங்க்குக்கு ரூ. 70 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பதைத் தவிா்க்க ட்ரோன்களை அரசு குறைந்த வாடகையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைத்திட வேண்டும்.
லத்தேரியை அடுத்த கம்பத்தம் பகுதியில் குட்டை தூா்வாறும் பணியின்போது பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு பனை மரம் வளா்ந்துவர 30 ஆண்டுகள் ஆகிறது. எனவே, பனை மரங்களை வெட்டுவதற்கு முன் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றிட உத்தரவிட வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற முள்ளுக் கத்திரிக்காயை அதிகளவில் நடவு செய்திட நாற்றுகள் வழங்கிட வேண்டும். முருங்கைக் கீரையில் இருந்து மாத்திரைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை வேலூா் மாவட்ட விவசாயிகளுக்கும் கற்றுத்தர வேண்டும். கால்நடைகள் வளா்க்கும் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் மாட்டுக்கொட்டகை அமைத்துத்தர வேண்டும் என்றனா்.
குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், இணை இயக்குநா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நந்தகுமாா், உதவிஆட்சியா் (பயிற்சி) பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.