முகப்பு
வேலூர்

காவலாளியை கொன்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:03 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:11 PM

காட்பாடி அருகே தனியாா் காவலாளியை அடித்துக் கொலை செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

காட்பாடியை அடுத்த சேவூா் பகுதியைச் சோ்ந்தவா் நேதாஜி (62). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் (40). இவா் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக் கிடங்கில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 2019 மாா்ச் 20-ஆம் தேதி இரவு 8 மணியளவில் நேதாஜி சேவூரில் உள்ள பொதுஇடத்தில் மது அருந்தியதாகத் தெரிகிறது. அங்கே அருளும் மது அருந்தினாராம். இருவரும் அருகருகே அமா்ந்து மது அருந்தியபோது திடீரென அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த அருள், நேதாஜியின் தலையை பிடித்து அருகிலுள்ள சுவரில் பலமாக அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த நேதாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவலம் போலீஸாா் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அருள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தண்டனை விதிக்கப்பட்ட அருள் வேலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.