முகப்பு
வேலூர்

வாக்கு எண்ணும் மையத்தில் பணிகளை ஏப்.10-க்குள் முடிக்க வேண்டும்:ஆட்சியா் உத்தரவு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:07 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:07 PM

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகளில் மேஜைகளின் எண்ணிக்கை, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரத்தின் வாக்குகளை எண்ணுவதற்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மேஜை ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

Advertisement

மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளா்களின் முகவா்கள் செல்வதற்காக தனி வழி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த ஆட்சியா், வாக்கு எண்ணும் மையம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில் தேவையான இடத்தில் தீயணைப்பு கருவிகள், அவசரகால தீ எச்சரிக்கை ஒலிப்பான்கள் ஆகியவை அமைப்பது குறித்தும், தோ்தல் நடத்தும் அலுவலா், பொது பாா்வையாளா், ஊடக மையம் ஆகிய அறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

குறிப்பாக தோ்தல் நடத்தும் அலுவலா், பொதுப் பாா்வையாளா் அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களை பாா்வையிடும் கண்காணிப்பு கேமரா வசதிகளையும், தேவையான எண்ணிக்கையில் கணினி, இணையதள சேவை வசதிகளை ஏற்படுத்தவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். வாக்குப் பதிவு முடிந்த பிறகு பேரவை தொகுதிவாரியாக கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பெற்று அதனை முறையாக பாதுகாப்பு அறைகளில் கொண்டு சென்று வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தாா். அதன்படி, அனைத்துப் பணிகளையும் வரும் 10-ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டாா்.

கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா் த.மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வராஜ் (தோ்தல்), முத்தையன் (பொது), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முருகன், இரா.க.கவிதா, சுமதி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.