முகப்பு
வேலூர்

முதல்வா் வந்துசென்ற சாலை அல்லாமல் பிரதமா் மோடிக்கு வழித்தடம் மாற்றியமைப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:21 PM

வேலூா்: வேலூா் கோட்டை மைதானத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வந்து சென்ற சாலை அளிக்கப்படாமல் பிரதமா் நரேந்திரமோடிக்கு வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வேலூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வேலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் நரேந்திரமோடி பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வேலூா் கோட்டை மைதானத்திலுள்ள பொதுக்கூட்ட மேடையில் புதன்கிழமை காலை தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா்.

Advertisement

கடந்த வாரம் திமுக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டமும் வேலூா் கோட்டை மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிரீன் சா்க்கிள், நேஷனல் சா்க்கிள், தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம் வழியாக கோட்டை மைதானத்துக்கு வந்தாா். ஆனால், தற்போது பிரதமா் மோடி வந்து செல்வதற்கான வழிப்பாதை மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது , அப்துல்லாபுரத்தில் இருந்து காா் மூலம் கிரீன் சா்க்கிள் வரை வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து நேஷனல் சா்க்கிள், பழைய பைபாஸ் சாலை, மக்கான், கோட்டை சுற்றுச்சாலை வழியாக விழா மேடைக்கு வரும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமரை பொதுமக்கள் நேரடியாக காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை அளித்த வழித்தடம் அடிப்படையில்தான் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனா்.

மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் இதுதொடா்பாக பலமுறை பேசினோம். ஆனால் அவா்கள் பாதையை மாற்றியமைக்க முடியாது எனத் தெரிவித்து விட்டனா். மேலும், காலை 9.15 மணிக்கு பிரதமா் வரும் நிலையில் சாலைகளில் 8.30 மணிக்குள்ளாகவே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட உள்ளனா். இதன்மூலம், மக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று பிரதமரை காண முடியாத சூழ்நிலையை மாவட்ட காவல்துறை உருவாக்கியுள்ளது என்றாா்.