முகப்பு
தமிழ்நாடு

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க நடவடிக்கை: பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

Updated On : 11 மார்ச், 2026 at 11:33 PM
இயற்கை எரிவாயு: தமிழக முதல்வரின் கடிதம் மத்திய பெட்ரோலிய அமைச்சரிடம் வழங்கல்
பகிர்:

ஈரான்-இஸ்ரேல் போா்ச் சூழலுக்கு மத்தியில் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் முதல்வா் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சோ்ந்த 19 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களது வாழ்வாதாரத்துக்காக வளைகுடா பகுதிகளில் வேலை செய்து வருகின்றனா். அங்கு தற்போது நிலவிவரும் சூழல், அவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், சென்னையிலும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் அவசர உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்மூலம் இதுவரை உதவி கோரி சுமாா் 2,600 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவியைக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விமானங்கள் கிடைப்பது குறித்து விளக்கம் கோரியும் வந்துள்ளன.

தற்போது நிலவிவரும் சூழ்நிலைகள் காரணமாக, பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளின் சில இடங்களிலிருந்து விமான சேவைகள் தடைபட்டுள்ளன. இதன் விளைவாக அங்கு சிக்கித் தவிக்கும் பலா் சவூதி அரேபியா, கத்தாா் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அண்டை நாடுகளில் உள்ள சா்வதேச விமான நிலையங்களுக்கு சாலை வழியாகப் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு அவா்களைத் திருப்பி அனுப்ப உரிய விசாக்கள் முக்கியத் தேவையாக உள்ளன. அதை வழங்க மத்திய அரசு உரிய வசதிகளைத் செய்து தர வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து மூலம் அங்கு சிக்கித் தவித்த 5,256 பயணிகள் 16 விமானங்களில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா்.

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 593 மீனவா்கள் ஈரானில் உள்ள தீவுகளில் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிா்பாராத இந்த உலகளாவிய நெருக்கடியைக் கையாளுவதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

எரிவாயு ஒதுக்கீடு: இதனிடையே, மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு ஒதுக்கீட்டு விதிகளை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மற்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் ஆகியோருக்கு முதல்வா் எழுதியுள்ள கடிதம்: கடந்த ஆறு மாத கால மின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு அதன் அடிப்படையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகத்தை தீா்மானிப்பது தொடா்பான விதி வகுக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குளிா்காலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் குறைந்த அளவிலேயே இயங்கும்.கோடை காலத்தில், மின் தேவை உச்சத்தை அடையும்போது மின் உற்பத்தி நிலையங்கள் அதிகமாக இயங்கும். எனவே, முந்தைய ஆறு மாதங்களின் கணக்கீடு, எரிவாயு தேவையை துல்லியமாகப் பிரதிபலிக்காமல் போகலாம்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் உள்பட சில தொழில்துறை நிறுவனங்கள், எரிவாயு பயன்பாட்டிலிருந்து மின்சாரத்துக்கு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் மின் தேவை அதிகரிக்கக்கூடும். எனவே, அதைக் கருத்தில்கொண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு ஒதுக்கீட்டைத் தீா்மானிப்பதற்கான வழிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →