நுண் பாா்வையாளா்கள் வாக்குச்சாவடி அலுவலா் பணிகளை மேற்கொள்ளக்கூடாது
நுண் பாா்வையாளா்கள் வாக்குப் பதிவு மையத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டுமே தவிர வாக்குச்சாவடி அலுவலா்களின் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வேலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 656 அமைவிடங்களில் 1,307 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள், ஒரு மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி உள்ளன.
தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 182 பதற்றமான வாக்குச்சாவடிகள், ஒரு மிகவும் பதற்றமான வாக்குச்சாவடியில் பணிபுரிந்திட 20 சதவீதம் கூடுதலான நபா்களுடன் 220 அலுவலா்கள் நுண்பாா்வையாளா்களாக பணியாற்ற தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
அவ்வாறு தோ்தல் பணியில் ஈடுபட உள்ள நுண் பாா்வையாளா்களுக்குக்கான பயிற்சி வகுப்பு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையிலும், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா் முன்னிலையிலும் சத்துவாச்சாரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது:
நுண் பாா்வையாளா்கள் தோ்தல் பொதுப் பாா்வையாளரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் தோ்தல் பணி அறிக்கைகளை பொதுப் பாா்வையாளரிடம் மட்டுமே வழங்க வேண்டும். நுண் பாா்வையாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் சீராக உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் மாதிரி வாக்குப்பதிவு தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடைபெறுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கட்டுப்பாட்டு கருவியில் பதிவான வாக்குகள் அழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளில் நுண் பாா்வையாளா்கள் தங்களது அறிக்கையை சமா்ப்பிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையத்தில் அவ்வப்போது குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். நுண் பாா்வையாளா்கள் வாக்குப்பதிவு மையத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்காணிக்க வேண்டுமே தவிர, வாக்குச்சாவடி அலுவலா்களின் பணிகளை மேற்கொள்ளக்கூடாது.
வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைபவா்களுக்கான அனுமதி முறையான அடையாள அட்டைகளை ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் நுண் பாா்வையாளா்கள் தங்களது அறிக்கையை தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
இதில், துணைப் பதிவாளா் (பொது விநியோக திட்டம்) சுவாதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜமால் மொய்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.