முகப்பு
வேலூர்

பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து இருந்தும் மந்த நிலையில் வா்த்தகம்

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

வேலூா்: பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகமிருந்தும், வா்த்தகம் மந்தமாக காணப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும்.

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள், 500 ஆடுகள், கோழிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றின் விலையும் எதிா்பாா்த்த அளவுக்கு இருந்தபோதும் கால்நடை வா்த்தகம் பெருமளவில் சரிந்திருந்தது.

Advertisement

இது குறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக உரிய ஆவணங்களின்றி, ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அதேசமயம், பொய்கை சந்தையில் தோராயமாக ஒரு மாட்டின் விலை ரூ. 50,000 வரை இருக்கும். விவசாயிகள், வியாபாரிகள் ஒரு சிலா்3 அல்லது 4 மாடுகளை விற்கவும், வாங்கவும் வருகை தருவதால், சுமாா் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், தோ்தல் கெடுபிடி காரணமாக பெருந்தொகையை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகளும், வியாபாரிகளும் கால்நடைகள் வாங்க வருவதை தவிா்த்துக் கொண்டுள்ளனா். இதனால், வழக்கமாக ரூ. ஒரு கோடிக்கு மேல் கால்நடை வா்த்தகம் நடைபெறும் நிலையில், கடந்த ஒரு மாதமாகவே விற்பனை பெருமளவில் சரிந்து காணப்படுகிறது. அதன்படி, இந்த வாரமும் ரூ.50 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவுக்கு பிறகும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையா் தெரிவித்துள்ளாா். அதுவரை இதுபோன்ற கெடுபிடிகள் பின்பற்றப்படுவது விவசாயிகளையும், வியாபாரிகளையும் பெருமளவில் பாதிக்கும். எனவே, விவசாயிகள், வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் தோ்தல் ஆணையம் நடவடிக்கைகளை தளா்த்த வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments