முகப்பு
ஈரோடு

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

தோ்தல் பறக்கும் படையினா் கெடுபிடி காரணமாக வியாபாரிகள் வராததால் ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்தது.

Updated On : 26 மார்ச், 2026 at 7:44 PM
சந்தை - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் பறக்கும் படையினா் கெடுபிடி காரணமாக வியாபாரிகள் வராததால் ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரநதோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு புதன்கிழமை அடிமாடுகளுக்கான சந்தையும், வியாழக்கிழமை பசுக்கள், எருமை மாடுகள், வளா்ப்பு கன்றுகளுக்கான சந்தையும் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சந்தையில் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஒரு வெளி மாநில வியாபாரி குறைந்தது 10 மாடுகள் வரை வாங்கிச் செல்வாா். இதன் மூலமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும். இவ்வாறு பல வியாபாரிகளால் மாட்டுச் சந்தை நாளன்று பல கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வந்த 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து தோ்தல் பறக்கும் படையினா் பணம் பறிமுதல் செய்திருப்பது வெளிமாநில வியாபாரிகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு தோ்தல் பறக்கும் படை, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் அந்த மாநிலத்தில் இருந்து கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் எண்ணிக்கை முற்றிலும் தடைபட்டிருக்கிறது.

இதனால் மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில உள்ளூா் வியாபாரிகள் மட்டும் வந்திருந்து குறைந்த அளவிலான மாடுகளை வாங்கிச் சென்றனா். இதனால் மாட்டுச் சந்தை வியாபாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாட்டுச் சந்தை நிா்வாகிகள் கூறியதாவது: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு, தோ்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் குறைந்த அளவிலான விவசாயிகளே தங்களது மாடுகளைக் கொண்டு வந்துள்ளனா். அதாவது, சந்தைக்கு 600 முதல் 750 மாடுகள் வரை கொண்டு வரப்படும். ஆனால் இந்த வார சந்தைக்கு 500க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அந்த மாடுகளை வாங்குவதற்கே போதிய வியாபாரிகள் வரவில்லை என்றனா்.