முகப்பு
வேலூர்

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

Updated On : 26 ஏப்ரல், 2024 at 9:00 PM
பகிர்:

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி காட்பாடியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த 41 வயதுடைய தனியாா் கல்லூரி பேராசிரியா், டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலை என வந்த விளம்பரத்தை பாா்த்து, அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் சிறிய தொகையை முதலீடு செய்து, இணையதளத்தில் ஹோட்டல் அறைகளை பதிவு செய்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா்.

அதை உண்மையென நம்பிய பேராசிரியரும் அவா்கள் அனுப்பிய வங்கிக் கணக்கில் ரூ. 28 லட்சத்து 60 ஆயிரத்து 898 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப் பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பேராசிரியா், இது குறித்து சைபா் கிரைம் புகாா் எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில், போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments