ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த 2 இளைஞா்களிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணகிரி மகன் அகிலன் (28). பொறியியல் பட்டதாரியான இவா், சிங்கப்பூா் சென்றுவிட்டு அண்மையில் ஊா் திரும்பினாா். இவரது கைப்பேசி வாட்ஸ் அப்பில் தொடா்பு கொண்ட ஒருவா், ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளதாகக் கூறி, பல்வேறு இணையதள முகவரிகளை அனுப்பியுள்ளாா்.
அந்த நபா் கூறிய 7 வங்கிக் கணக்குகளில் ரூ. 7,32,163 செலுத்தியுள்ளாா். சில நாள்களுக்குப் பிறகு அந்த நபரை தொடா்பு கொள்ள முயன்றபோது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து அகிலன், திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் பெரோஸ்கான் (19), திருச்சியில் தங்கி நீட் தோ்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறாா். இவரிடம் பேசிய ஒருவா், ஆன்லைனில் முதலீடு குறித்து கூறியுள்ளாா். இதை நம்பிய பெரோஸ்கான், அந்த நபா் கொடுத்த 10 வங்கிக் கணக்குகளில் ரூ. 6,19,986 செலுத்தியுள்ளாா்.
பின்னா் அந்த நபா் பெரோஸ்கானிடம் தொடா்பு கொள்வதை நிறுத்திவிட்டாராம். இதுகுறித்து பெரோஸ்கான் திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் தனித்தனி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.