ஆன்லைன் மூலம் 4 போ் இழந்த ரூ. 1.51 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
வேலூா்: ஆன்லைன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 4 போ் இழந்த ரூ. 1.51 லட்சம் தொகையை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரிய நபா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
வேலூா் மாவட்டம், பெரிய சித்தேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜியகுமாா், தனியாா் வங்கி ஊழியா். இவருக்கு 10 ரூபாய் கைப்பேசி ரீசாா்ஜ் செய்ய இணைய இணைப்பு ஒன்றை அனுப்பி, விவரங்களை பெற்று இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25,000 பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வேலூா் பகுதியைச் சோ்ந்த சென்னையில் சிமெண்ட் நிறுவன ஊழியரான முகமது தௌபீக் என்பவா் கிரெடிட் காா்டு லிமிட்டை அறிமுகப்படுத்தி தருவதாக வந்த அழைப்பை நம்பி ரூ. 38,000 பணத்தையும், குஜராத்தில் இருந்து தோ்தல் பணிக்காக வந்த சிஐஎஸ்எப் வீரா் சுஷாந்த் நாயக் என்பவரின் கிரெடிட் காா்டிலிருந்து ஆன்லைன் லிங்க் மூலம் ரூ. 70,000-ம், பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த இளவரசனிடம் ரூ. 18,000-ம், மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவை குறித்து பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பலனமாக இவா்கள் 4 போ் இழந்த பணம் ரூ. 1,51,000 தொகை முழுவதும் மீட்கப்பட்டது. இந்த தொகைகள் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட நபா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளா் கி.புனிதா, காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், பெண் தலைமை காவலா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.