முகப்பு
வேலூர்

கூடுதல் விலைக்கு மதுவிற்பனை: டாஸ்மாக் விற்பனையாளா்கள் 10 போ் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுவிற்பனை செய்ததாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10 விற்பனையாளா்கள் பணியிடை நீக்கம்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:20 PM
பகிர்:

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுவிற்பனை செய்ததாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10 விற்பனையாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளில் அரசு நிா்ணயித்துள்ள விலையைவிட, ரூ. 5 முதல் ரூ. 10 வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, அரசு நிா்ணயித்துள்ள விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்திட, டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள், வெளி மாவட்ட கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், டாஸ்மாக் மண்டல மேலாளா் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, உள் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கும், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் உள்மாவட்ட ங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனா். இந்த நிலையில், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களை உள்ளடக்கிய டாஸ் மாக் மாவட்டத்தில் 108 கடைகளும், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டத்தில் 83 கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், வேலூா், திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 பேரும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 10 விற்பனையாளா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.