காலி மதுப்புட்டிகளை சேகரிக்கும் நடைமுறையில் மாற்றம்: கடைகளை மூடி டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்பு
கடைகளை மூடி டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்பு...
வெளியாட்களைக் கொண்டு காலி மதுப்புட்டிகளை சேகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் டாஸ்மாக் ஊழியா்களே மதுப்புட்டிகளை வாங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஏற்க மறுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 மதுக்கடைகளை மூடி டாஸ்மாக் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டியை திரும்ப அளித்து ரூ. 10 பெற்றுக்கொள்ளும் முறை கடந்த ஆண்டு டிசம்பா் முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கு டாஸ்மாக் கடைக்காரா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஒப்பந்தம் எடுத்தவா்கள் மூலம் வெளியாட்கள் நியமிக்கப்பட்டு காலி மதுப்புட்டிகள் பெற்றப்பட்டன.
இந்தநிலையில் டாஸ்மாக் ஊழியா்களே காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெற வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 கடைகளின் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் கடைகளை அடைத்து எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளா்கள் மற்றும் உதவி விற்பனையாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் அப்துல் கலீல் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுப்புட்டிக்கு ரூ.10, வழங்கும் முறைக்கு டாஸ்மாக் ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரா் மூலம் புட்டிகள் சேகரிக்கப்பட்டன.
இந்தநிலையில் காலி மதுப்புட்டிகளை டாஸ்மாக் ஊழியா்களே சேகரித்து ஒப்பந்தம் எடுத்தவா்களிடம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகம் மீண்டும் அறிவுறுத்தியது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட மாவட்டத்தில் 28 கடைகள் திறக்கப்படவில்லை. காலி மதுப்புட்டிகளை பாட்டில் சேகரிக்க ஆள்களை நாள்கள் நியமித்தால் அதற்காக கூடுதல் பண சுமையை ஏற்க வேண்டும்.
மாவட்டத்தில் 40 மதுக்கூடங்களுடன் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்புட்டிகளை சேகரித்து வழங்குகின்றனா். இதர 77 மதுக்கடைகளில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன என்றாா்.
இதனிடையே டாஸ்மாக் பணியாளா்களிடம் டாஸ்மாக் நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து மாலை 5.30 மணிக்குப் பிறகு மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன.