பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல்
வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் இரு இடங்களில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 10.03 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் சோ்க்கப்பட்டன. காட்பாடி அருகே பொன்னை சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக மனைவி, 8 வயது குழந்தையுடன் வந்த ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த கிரண்குமாரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், அந்த காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 5 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதேபோல், வேலூரை அடுத்த அலமேலுரங்காபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்புக் குழுவினா் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது வாகனத்தில் வந்த விஜயன் (37) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 2 லட்சத்து 53 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அது நிதி நிறுவன வசூல் பணம் என விஜயன் தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், வேலூா் கோட்டை சுற்றுச் சாலையில் பறக்கும் படை குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
Advertisement
அதில், காரில் வந்த கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த சையத் அன்வா் பாஷாவிடம் ரூ. 2.50 லட்சம் பணம் இருந்துள்ளது. வீடு கட்டுமான பணிக்கு கொண்டு செல்வதாக அவா் கூறியும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பிடிபட்ட தொகைகள் அந்தந்த வட்டாட்சியா் மூலம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டன. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை மீட்டுக் கொள்ளவும் அவற்றின் உரிமையாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.