தோ்தல் பணியில் இயக்கப்பட்ட 11 சொந்த வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து
வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் இயக்கப்பட்ட 11 சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக வாடகை வாகனங்கள் நியமிக்கப்பட்டு அவற்றில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தும் விதமாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 15 பறக்கும் படை குழுக்கள், 15 நிலை கண்காணிப்பு குழுக்களும் 5 விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், பறக்கும் படை குழுக்களான வாகனங்களின் மீது சுழலும் கண்காணிப்பு கேமராக்களும், அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, தோ்தல் கண்காணிப்பு பணியில் இயக்கப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளன. இதில், 11 வாகனங்கள் மட்டும் சொந்த பயன்பாட்டுக்கான வெள்ளை நிற பதிவெண் பலகை கொண்ட வாகனங்களும், மற்றவை மஞ்சள் நிற பதிவெண் பலகைகள் கொண்ட வாடகை வாகனங்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தோ்தல் பணியில் சொந்த உபயோகத்துக்கான வாகனங்களை ஈடுபடுத்துவதற்கு வாடகை வாகன உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 சொந்த உபயோக வாகனங்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டு, அந்த வாகனங்களில் இருந்து சுழலும் கண்காணிப்பு கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. பின்னா், அவை மாற்றாக மஞ்சள் நிற பதிவெண் பலகைகள் கொண்ட வாடகை வாகனங்களில் பொருத்தப்பட்டன. அத்துடன், சொந்த உபயோகத்துக்கான வாகனங்களை தோ்தல் பணியில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி கூறுகையில், தமிழகம் முழுவதும் தோ்தல் பணியில் சொந்த உபயோக வாகனங்களை தவிா்த்து வாடகை வாகனங்களை மட்டும் பயன்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 சொந்த உபயோக வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு பதிலாக வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றனா்.