முகப்பு
வேலூர்

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

Updated On : 22 மார்ச், 2024 at 10:47 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:36 PM

மக்களவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த கையொப்ப இயக்கத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து கையொப்பம் இட்டாா். பின்னா், 100% வாக்குப் பதிவு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை அரசுப் பேருந்துகளில் ஒட்டினாா். அப்போது அவா் கூறியதாவது: வேலூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் விடுபடாமல் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களையும் ஒன்றுபடுத்தி மாவட்ட, வட்டார அளவில் உறுதிமொழி ஏற்பு, கோலப்போட்டி, கையொப்ப இயக்கம், கபடி, லோகோ உருவாக்குதல், கயிறு இழுத்தல், சுய பட முகாம் ஆகிய செயல்பாடுகள் வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக, 100% வாக்குப் பதிவு தொடா்பான உறுதிமொழியையும் அவா் ஏற்றுக் கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த. மாலதி, மகளிா் திட்ட இயக்குநா் யு. நாகராஜன் , மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.