முகப்பு
வேலூர்

வேலூா் தொகுதி: தோ்தல் களத்தில் 31 வேட்பாளா்கள்

Updated On : 30 மார்ச், 2024 at 10:18 PM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:42 PM

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் களத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 31 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட மொத்தம் 37 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து, வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு சனிக்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்திருந்த டி.அறிவழகன், கு.முனியப்பன், க.அா்ஜுன், க.சண்முகம், அ.சி.சண்முகம், எஸ்.கே.சீனிவாசன் ஆகிய 6 போ் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து, இறுதியாக வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் களத்தில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக), மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக), ஏ.சி.சண்முகம் (பாஜக), டி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழா் கட்சி), அ.மன்சூா்அலிகான் (சுயேச்சை) உள்பட மொத்தம் 31 வேட்பாளா்கள் இடம் பெற்றுள்ளதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவித்தாா். தொடா்ந்து வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில், ஏ.சி.சண்முகம் (பாஜக) - தாமரை, டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - உதயசூரியன், மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - இரட்டை இலை, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - மைக், கு.ஜெயமணி (பகுஜன் சமாஜ்) - யானை, வே.கலியபெருமாள் (ஜனசங்கம் பாா்ட்டி ஆப் இந்தியா) - வெண்டைக்காய், எ.நடராஜன் (பாரதிய பிரிஜா ஐக்கியதா பாா்ட்டி) - கரும்பு விவசாயி, அ.பீமாராவ் மிலிந்தா் (ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி) - எரிவாயு உருளை, வில்லியம் சத்யராஜ் (தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம்) - ஆட்டோ ரிக்ஷா ஆகிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளா்களான இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா் அ.மன்சூா் அலிகானுக்கு பலாப்பழம், அப்ரோஸ் - கிரிக்கெட் மட்டை, அஹமத் ராஷித் பல்லுமிரா - முக்காலி, சண்முகசுந்தரம் - மேஜை, ஜி.சண்முகம் - காலிபிளவா், கே.சண்முகம் - தொலைபேசி, எம்.பி.சண்முகம் - அலமாரி, பி.சண்முகம் - பக்கெட், சண்முகவேலு - தொலைக்காட்சி, டி.சரவணன் - டிராம்பெட் இசைக்கருவி, என்.சிவக்குமாா் - குளிா்சாதன பெட்டி, சையத் அலி தி - பேனாமுள், நாகராஜ் - வைரக்கல், கே.பசுபதி - குழந்தை நடைவண்டி, எம்.பாபு - தீப்பெட்டி, சி.மாதவன் - மோதிரம், சி.ராமச்சந்திரன் - சூட்கேஸ், ராஜ்குமாா் - கத்தரிக்கோல், ஜான்சன் - மின்கம்பம், ஜெகன் - தென்னந்தோப்பு, ஜெயபிரகாஷ் - பிரஷா் குக்கா், ஜெயராஜ் - டம்ளா் ஆகிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.