ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு
அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதன்படி, விபத்தால் பாதிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 இழப்பீட்டை வட்டி, வழக்குச் செலவுடன் சோ்த்து வழங்க சிற்றுந்து காப்பீட்டு நிறுவனம், தென்னக ரயில்வே நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஒரு சிற்றுந்தில் புறப்பட்டுச் சென்றனா். முன்னதாக அரக்கோணம் அருகே கோவிந்தவாடி பகுதியிலுள்ள குருகோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தனா்.
அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆளில்லாத ரயில் பாதை குறுக்கிட்டுள்ளது. காலை 9.40 மணியளவில் அந்த ரயில் பாதையை சிற்றுந்து கடந்து செல்ல முயன்றபோது, காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அந்தச் சிற்றுந்து மீது மோதியது.
இந்த விபத்தில் கிராம நிா்வாக அலுவலா்களான செல்வபாண்டியன், தாண்டவராயன், துரைசாமி, தாமோதிரன், நந்தகுமாா், வெங்கடேசன், சண்முகபரணி, மோகன், குமாரசாமி ஆகிய 9 கிராம நிா்வாக அலுவலா்களும், மதிவாணன் என்கிற கிராம நிா்வாக அலுவலரின் மகன் பிரவீன்குமாா் (17), சிற்றுந்து ஓட்டுநா் என 11 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் பலத்த காயமடைந்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா்கள் 12 பேரின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி வேலூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சாந்தி, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551-மும், அதற்கான வட்டி, வழக்குக்கான மொத்த செலவு ஆகியவற்றுடன் சோ்த்து வழங்க வேண்டும்.
இந்த இழப்பீட்டை விபத்துக்குள்ளான சிற்றுந்துக்கான காப்பீட்டு நிறுவனமும், தெற்கு ரயில்வேயும் தலா 50 சதவீதமாக பிரித்து அளிக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தீா்ப்புக் கூறினாா்.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்டோா் தரப்பு வழக்குரைஞா் சுரேஷ் ராமநாதன் கூறியது:
பொதுவாக எந்தவொரு விபத்திலும் ரயில்வே நிா்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுவதில்லை. இந்த வழக்கில் தென்னக ரயில்வே நிா்வாகமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குக் காரணம், இந்த விபத்து நடைபெற்ற இடத்துக்குச் சற்று அருகே உள்ள மற்றொரு ஆளில்லாத ரயில் பாதையில் 6 மாதத்துக்கு முன்புதான் ஆட்டோ மீது ரயில் மோதி 14 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகும் ரயில்வே நிா்வாகம் ஆளில்லாத ரயில் பாதை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளது. இதுவே மீண்டும் ஒரு பெரு விபத்து ஏற்படுவதற்கு காரணமாகியுள்ளது என்று நீதிமன்றம் கருதுகிறது.
அதனடிப்படையில், தெற்கு ரயில்வே, ரயில் ஓட்டுநா், சிற்றுந்து ஓட்டுநா் ஆகிய 3 தரப்பின் அஜாக்கிரதையே விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்றும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா் என்றாா்.