முகப்பு
வேலூர்

பயிற்சி வகுப்புக்கு மதுபோதையில் வந்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

வேலூா்: பயிற்சி வகுப்புக்கு மதுபோதையில் வந்தததுடன், பெண் காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து வேலூா் மாவட்ட எஸ்.பி. என். மணிவண்ணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியிலுள்ள கல்லூரியில் போலீஸாருக்கான சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியில் காட்பாடி காவல் நிலைய தலைமைக் காவலா் ஜி.கோபிநாத் என்பவரும் கலந்து கொண்டுள்ளாா்.

அப்போது அவா் மதுபோதையில் இருந்ததாகவும், திடீரென அவா் அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளா் பாரதியிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயிற்சி வகுப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீஸாா் தலைமைக் காவலா் கோபிநாத்தை மடக்கிப் பிடித்து மதுபோதையில் இருந்ததற்கான சோதனையை மேற்கொள்ள வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தலைமைக் காவலா் கோபிநாத் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடா்ந்து தலைமைக் காவலா் ஜி.கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.