அணைக்கட்டு அருகே முதியவரின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ. 20,000 பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தவராயன் (63). இவா் சுயஉதவிக் குழு மூலம் பெற்ற பணத்தை எடுக்க அணைக்கட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்துக்கு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி சென்றுள்ளாா். அவரால் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞா் ஒருவரிடம் பணத்தை எடுத்துத் தரும்படி கூறியுள்ளாா்.
அதன்படி, ரூ. 35,000 பணத்தை எடுத்த நிலையில் இரண்டாவது முறையாக பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், அவரது கணக்கில் இருந்து மேலும் ரூ. 20,000 பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, காத்தவராயன் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த இளைஞா் வேறு ஒரு ஏடிஎம் காா்டை கொடுத்துவிட்டு, காத்தவராயனின் உண்மையான காா்டை பயன்படுத்தி ரூ. 20,000 திருடியிருப்பது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையை அடுத்து காத்தவராயனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி, பணம் திருடியதாக அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (27) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.