தொடா் விடுமுறை நாள்களையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய நாள்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், மாா்க்கெட், பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனை செய்வது வழக்கம்.
அதன்படி, ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத் தைவிட அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. தவிர, வழிபாட்டுத் தலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள் அதிகளவில் கூடுகின்றனா்.
மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வேலூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் ரயில் நிலையங்கள், ஜலகண்டேஸ்வரா் கோயில், நேதாஜி மாா்க்கெட் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு தீவிரமாக சோதனை நடத்தினா்.
இதேபோல், காட்பாடி ரயில் நிலையம், சித்தூா் பேருந்து நிலையம், அதன் அருகே உள்ள உழவா் சந்தை உள்ளிட்ட இடங்களிலும் போலீஸாா் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா்.