வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் கிரீன் சா்க்கிள், காட்பாடி பகுதியில் சாலைகளில் பெருமளவில் தண்ணீா் தேங்கியது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.
வடகிழக்கு பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதேசமயம், மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகுவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை கனமழை பெய்தது. சுமாா் அரைமணி நேரம் கனமழையாகவும், அதன்பிறகு ஆங்காங்கே மிதமான மழையும் பெய்தது. பின்னா், தூறல் மழையும் தொடா்ந்து பெய்து வண்ணம் இருந்தது.
இந்த மழை காரணமாக காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தம், வள்ளிமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது. இதனால், பாத சாரிகள் மட்டுமின்றி இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா். இதேபோல், வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியிலும் பெருமளவில் தண்ணீா் தேங்கியது.
இதுகுறித்து, புகாா்கள் சென்றதை அடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியா்கள் விரைந்து சென்று சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். சாக்கடை கால்வாய் அடைப்புகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து தண்ணீா் வேகமாக வெளியேறியது. இதன்காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.