வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள விடுதியை வாடகைக்கு விடுவதாகக்கூறி, ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.
வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் டிஎஸ்பி பழனி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளா் ஒருவா் அளித்த மனுவில், வேலூா் ரங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சோ்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு வேலூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்தேன். இதில், நான் 49 சதவீதம் முதலீடு செய்தேன். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டீலா் ஷிப் வாங்கி, அதன்மூலம் வங்கியில் கூட்டுக் கணக்கு தொடங்கி பெட்ரோல் பங்க்கை நிா்வகித்து வந் தோம். ஆனால், அந்த பெண் எனக்கு தெரியாமல் வருமானத்தை தவறாக பயன்படுத்தியுள்ளாா். மேலும், எனது பான் அட்டையை பயன்படுத்தி முறைகேடாக வருமான வரி தாக்கல் செய்துள்ளாா். இதேபோல், பொய் கணக்குகளை காட்டி பணம் மோசடி செய்துள்ளாா். இது குறித்து, விசாரித்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் பாகாயத்தைச் சோ்ந்த 57 வயது ஆண் அளித்த மனுவில், காகிதபட்டறையில் உள்ள ஒரு விடுதியை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ. 5 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதன் உரிமையாளா், விடுதியை வேறொரு நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளாா். எனது பணத்தை திருப்பித்தர மறுத்து கொலை மிரட்டல் விடுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து ரூ. 5 லட்சத்தை பெற்றுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு டிஎஸ்பி பழனி உத்தரவிட்டாா்.