அணைக்கட்டு வட்டம் முத்துகுமரன் மலை, பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிறு தானிய முதன்மை பதப்படுத்தும் மையங்களில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.
வேளாண்மை விற்பனை, வணிகத்துறை சாா்பில் சிறுதானியங்கள் அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்களில் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முறையே வங்கிகளின் மூலம் கடனுதவி பெற்று சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்கும் பயனாளிக்கு 75 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா, பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட முத்துகுமரன் மலை, போ்ணாம்பட்டு வட்டம், கொத்தூா், சொ்லாபள்ளி ஆகிய 4 இடங்களில் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கு பிறகு 75 சதவீதம் மானிய தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம் முறையே 60% மற்றும் 40% என இரு தவணைகளில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சி முத்துகுமரன் மலையில் ராஜ்குமாா் என்பரால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். இதேபோல், அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள அகரமாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையத்தையும் ஆய்வு செய்தாா்.
அப்போது, பீஞ்சமந்தை மலைக் கிராம ங்களில் அதிகளவு பயிரிடப்படும் சாமை, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்திடவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தேன்மொழி, வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநா் கலைச்செல்வி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.