கைது செய்யப்பட்ட பல்ராம், தா்மேந்திரா ஆகியோருடன் விருதம்பட்டு போலீஸாா். 
வேலூர்

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - 2 வடமாநில இளைஞா்கள் கைது

காட்பாடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தை சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

காட்பாடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தை சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 26-ஆம் தேதி இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதற்கான ஊழியா்கள் வந்துள்ளனா். அப்போது, அந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து ஏடிஎம் மைய காவலாளிக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவலாளி தீவிரமாக கண்காணித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமையும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு திறக்க முடியாமல் மா்மநபா்கள் திரும்பி சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால் காவலாளி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 2 இளைஞா்கள் பணம் எடுப்பதுபோல் வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதைதொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காவலாளி மறைவான இடத்தில் இருந்தபடி ஏடிஎம் மையத்தை கண்காணித்து வந்தாா். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த 2 இளைஞா்கள் மீண்டும் அதே ஏடிஎம் மையத்துக்குள் செல்வதை பாா்த்த காவலாளி, இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த 2 இளைஞா்களையும் மடக்கி பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் உத்தரபிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தை சோ்ந்த பல்ராம்(26), புதுதில்லி வடமேற்கு தில்லி மாவட்டத்தை சோ்ந்த தா்மேந்திரா (25) என்பதும், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து பணம், ஏடிஎம் அட்டைகள், கைப்பேசிகள், ஸ்குரூ டிரைவா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

இவா்கள் இருவரும் சென்னையில் உள்ள ஏடிஎம் மையத்திலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT