திருப்பதி செல்லும் சாலையை இணைக்கும் வகையில் காட்பாடியில் இருந்து 7 கி.மீ. தூரத்துக்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
மாநில நெடுஞ்சாலையான அப்துல்லாபுரம் -ஆசனாம்பட்டு-ஆலங்காயம்- திருப்பத்தூா் சாலை மொத்தம் 79.50 கி.மீ. நீளம் கொண்டது. இந்த சாலையில் தற்போது வேலூா் கோட்டத்தின் கீழ் 8 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை அணைக்கட்டு கெங்கநல்லூா் பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 276 கி.மீ. சாலைகளை விரிவுப்படுத்திட ரூ. 475 கோடி செலவிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் சாலை விரிவுப்படுத்த ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,281 தரைப்பாலங்கள் உயா்மட்ட பாலமாக உயா்த்தப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் 12 மேம்பாலங்கள் அமைக்க செலவிடப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கையான பொன்னை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. காங்கேயநல்லூரிலும் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் விரைவில் திறக்கப்படும்.
வேலூா் மாவட்டத்தில் 5 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டதில், மூன்று மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2 ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வா் அறிவிப்புப்படி இருவழி சாலைகளை 4 வழி சாலைகளாக மாற்றுகிறோம். வேலூரில் புறவழி சாலை அமைக்க முக்கியத்துவம் அளித்து மங்களூா் - விழுப்புரம் சாலை இடையே லத்தேரியில் இணைப்பு சாலை அமைக்கப்படும்.
தென் பகுதியிலிருந்து திருப்பதி செல்லும் ஆன்மிக பக்தா்கள் வேலூரை கடந்து செல்லும்போது காட்பாடி வழியாக செல்ல வேண்டும். அதற்கு புறவழி சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக காட்பாடி சித்தூா் சாலையில் இருந்து ராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி சாலையை சுற்றுச்சாலையாக இணைக்க 7 கி.மீ. தூரத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பள்ளிகொண்டா புறவழி சாலைக்கு ரூ. 10.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலை விரைவில் அமைக்கப்படும்.
சாலையை விரிவாக்கம் செய்யும்போது ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நடவு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு மட்டும் 5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), அமலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் க.முரளி, வேலூா் கோட்டப் பொறியாளா் ஆா்.என்.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.