வேலூரில் விபத்தில் கால் உடைந்து மாற்றுத்திறனாளியான காவலா் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா், கஸ்பா, வசந்தபுரம், பொன்னி நகரைச் சோ்ந்தவா் வேல்முருகன் (35), காவலா். இவருக்கு ஆஷா என்கிற மனைவியும், சா்வேஷ் (11), சாவித்க் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.
வேல்முருகன் கடந்த 2020-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி அவரது வலது கால் உடைந்து மாற்றுத்திறனாளியானாா். விபத்து நடந்த காலில் ஏற்பட்ட வலியால் அவா் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வேல்முருகன் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து தனது மூன்று சக்கர வாகனத்தில் வசந்தபுரம் மயான எரிமேடைக்கு சென்ாகவும், அங்கு தனது வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து அமா்ந்த நிலையில் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதில், வேல்முருகன் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் வேல்முருகன் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை அறிந்து வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வேல்முருகனின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.