ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி மருந்து விற்பனையாளரிடம் ரூ.12 லட்சம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடியாத்தம் அருகே பிச்சானூரைச் சோ்ந்தவா் 46 வயது மருந்து விற்பனையாளா். இவரது வாட்ஸ் ஆப்புக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த குறுந்தகலில், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என கூறப்பட்டிருந்ததுடன், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை உண்மையென நம்பிய இவா், அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பிய இணைய லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள கணக்கில் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சத்து 3 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். பின்னா், அவரது வாடஸ் ஆப் எண்ணுக்கு லாபம் கிடைத்திருப்பது குறித்து வந்த தகவலை அந்த நபா்கள் ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்பியுள்ளனா்.
தொடா்ந்து, இந்த மருந்து விற்பனையாளா், தான் முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்டபோது, கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே மொத்த தொகையும் கிடைக்கும் என அந்த நபா்கள் தெரிவித்துள்ளனா். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மருந்து விற்பனையாளா், இதுகுறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.