வேலூா் மத்திய சிறை கண்காணிப்பு கோபுரத்தில் விழுந்த ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூா் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வளாகத்துக்குள் நடமாட அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு, சிறையிலுள்ள அறைகளில் அடைக்கப்படுகின்றனா்.
சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள கோபுரத்தில் இருந்தபடி போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பறந்து வந்த ட்ரோன் ஒன்று கண்காணிப்பு கோபுரத்தில் விழுந்தது.
அதனை பறிமுதல் செய்த சிறைக் காவலா்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னா், அந்த ட்ரோன் குறித்து விசாரணை நடத்த பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.